வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் விளாசிய 97 ரன்கள், இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது. தொடக்க வீரராகக் களமிறங்கி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது. குறிப்பாக, இக்கட்டான சூழலில் நிதானமாகவும், தேவைப்படும் போது சிக்ஸர்களைப் பறக்கவிட்டும் அவர் விளையாடிய விதம், விராட் கோலியின் சாதனையை முறியடித்து டி20 உலகக்கோப்பை சேஸிங்கில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

​போட்டி முடிந்த பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனை கட்டிப்பிடித்துப் பாராட்டிய விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. “நல்ல மனிதர்களுக்கு நல்ல விஷயங்கள் சரியான நேரத்தில் நடக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா, அணியின் தேவைக்காக சஞ்சு காட்டிய அர்ப்பணிப்பை வெகுவாகப் புகழ்ந்தார். சூர்யாவின் இடைவிடாத பாராட்டுக்களால் நெகிழ்ந்து போன சஞ்சு சாம்சன், “போதும் நிறுத்துப்பா.. என்ன அழ வைக்காத!” என ஜாலியாகக் கூறி சூர்யாவைக் கட்டிப்பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.