உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள கப்பர்பூர் கிராமத்தில், ஒரே அறையில் தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கப்பர்பூர் பகுதியைச் சேர்ந்த மனிஷ் (35), அவரது மனைவி சீமா (32) மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மனிஷின் சகோதரர் ஜெய்கிஷன், வீட்டின் கதவைத் தாண்டி உள்ளே சென்று பார்த்தபோது, ஐந்து பேரும் சடலமாகத் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பின்வரும் விவரங்கள் தெரியவந்துள்ளன, சுமார் 10×15 அடி பரப்பளவு கொண்ட சிறிய அறையில் சடலங்கள் மீட்கப்பட்டன.

கட்டில் மீது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்களும், மற்றொரு குழந்தையின் சடலம் கட்டிலுக்கு அருகிலும் கிடந்தன. அறையில் இருந்த மின்கம்பிகள் மூலம் மனிஷின் கைகள் கருகி இருந்தன. சீமாவின் தலையில் பலத்த காயம் இருந்தது. அறையில் ஒரு உலக்கை, கயிறு மற்றும் பால் நிரப்பப்பட்ட கண்ணாடி டம்ளர் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த மரணம் தொடர்பாக போலீசார் இரண்டு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது குடும்பத்தினர் அனைவரும் பாலில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது மனிஷ் முதலில் தனது மனைவியைக் கொலை செய்து, பின்னர் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் மின்சாரத்தைப் பாய்ச்சித் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அறையின் சுவரில், “நாங்கள் எங்கள் விருப்பப்படியே இறக்கிறோம், இதற்காக போலீஸார் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என மனிஷ் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், மனிஷின் செல்போனில் அவர் பதிவு செய்த வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளது. அதில், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் கவலைகள் காரணமாகத் தற்கொலை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிஷ் அடிக்கடி ஒரு உள்ளூர் கோயிலுக்குச் சென்று வந்ததால், இந்த மரணத்தில் ‘மந்திர-தந்திர’  தொடர்புகள் இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாகக் கோயில் பூசாரி ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இது ஒரு வதந்தி என்று கோயில் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SSP) ஸ்லோக் குமார் கூறுகையில், “முதற்கட்ட ஆய்வில் இது கூட்டுத் தற்கொலை போலத் தெரிந்தாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான உண்மை தெரியவரும்” என்றார்.