அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான மற்றும் ஆக்ரோஷமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்காவின் 1000 ஏவுகணைகள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டு, நேரடியாக ஈரானின் இலக்குகளை நோக்கி குறிவைக்கப்பட்டுள்ளன” என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகத்தில் எந்தப் பகுதியிலாவது வைத்து தன்னை படுகொலை செய்ய ஈரான் அரசு சதித் திட்டமோ அல்லது அதற்கான முயற்சியோ மேற்கொண்டால், அமெரிக்க ராணுவம் ஒட்டுமொத்த ஈரானையும் முற்றிலுமாக அழித்துவிடும் என்றும், ஈரானின் அனைத்துப் பகுதிகள் மீதும் தொடர்ந்து ஓராண்டு காலம் இடைவிடாத தாக்குதலை நடத்த ராணுவத்திற்கு ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் முழு திறனுடன் தயாராக இருக்கிறார்கள் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் கடுமையான வார்த்தைப் போரினால் இரு நாட்டு உறவிலும் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டின் போது, ஈரானின் ‘கொலை பட்டியலில்’ தான் முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், தன்னை குறிவைத்து ஈரான் சதி செய்யக்கூடும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலேயே இந்த கடுமையான பதிலடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஈரானின் இந்த ரகசிய சதித்திட்டங்கள் குறித்த உளவுத் தகவல்களை இஸ்ரேல் நாடும் அமெரிக்காவுடன் பகிர்ந்துள்ளதாகத் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே வார்த்தைப் போர் உச்சத்தை எட்டியுள்ளது.
