சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கண்டாதேவி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் மோசடி நடைபெற்றுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் எங்கள் ஊராட்சி தலைவரின் கணவர் பெயர், அவருடைய தாயார், உடன் பிறந்தவர்கள், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் போன்றோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கூட்டுறவு வங்கிகளில் வேலை பார்க்கும் சிலரின் பெயர்களிலும் அட்டை உள்ளது. இதன் மூலம் அவர்கள் வேலை பார்த்ததாக கணக்கு காண்பித்து ஊராட்சிக்கு சொந்தமான நிதியை மோசடி செய்துள்ளனர். அதன்பிறகு ஊராட்சித் தலைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு திட்டத்தில் இலவச வீடுகளுக்கும் பரிந்துரை செய்து சட்டத்திற்கு மாறாக வீடுகள் கட்டி வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் முறையாக விசாரணை நடத்தவில்லை.

எனவே ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி 12 வாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.