சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தினசரி 2.5 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் நிலையில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக முதல் தர பெட்டிகளை மெட்ரோ ரயில்களில் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவுக்கு முன்பு வரை மெட்ரோ ரயில்களில் முதல் தர பெட்டிகள் இருந்த நிலையில் கொரோனாவுக்கு பிறகு அது பெண்களின் பெட்டியாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் முதல் தர பெட்டிகளில் சாதாரண பெட்டிகளை விட கட்டணம் இரு மடங்காக இருக்கும் நிலையில், அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வரும் நிலையில் 6 பெட்டிகளாக மாற்றுவதற்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறதாம். அதன் பிறகு தற்போது 42 மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வரும் நிலையில் அதன் எண்ணிக்கையை 52 ஆக மாற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலின் காரணமாக 2.5 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக ஒப்பந்த நிறுவனங்களுடன் உரிய முறையில் ஆலோசிக்கப்பட்டு விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் முதல் தர பெட்டிகளில் பயணிகள் குறைவான அளவில் செல்வதால் அவற்றை அறிமுகப்படுத்துவதற்கு சாத்தியம் இல்லை என்று தான் கூறப்படுகிறது.