தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த வருடம் அக்டோபர் 28ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பல தினங்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் திடீரென்று தமிழக அரசுக்கு திருப்பியனுப்பினார். ஆளுநரின்  இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தினை தெரிவித்தனர்.

இந்நிலையில் யாரோ கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கலாம் என சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். ஆனால் அந்த அழுத்தம் எங்கிருந்து வந்தது?, யார் திருப்பி அனுப்ப சொன்னார்கள்? என்பது தெரியவில்லை. ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க சட்ட பேரவைக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் எந்த சட்டத்தை வைத்து கூறுகிறார் என்று அப்பாவு கேள்வி எழுப்பினார்.