தமிழக சுகாதாரத்துறை மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள காந்தல் பாவா பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கடந்த 6-ம் தேதி சத்து மாத்திரை கிடைத்த நிலையில் யார் அதிகமாக சத்து மாத்திரைகளை சாப்பிடுவது என்ற போட்டி நிலவியுள்ளது. உடனே 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மற்றும் 6, 7-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் சாக்லேட் சாப்பிடுவது போன்று 30 முதல் 60 சத்து மாத்திரைகள் வரை சாப்பிட்டுள்ளனர். இதனால் 6 பேரும் மயங்கி விழுந்த நிலையில் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெய்பா பாத்திமா என்ற மாணவி மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து சொல்லப்படும்போது உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாத்திரை விநியோகிக்கும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊட்டியில் அதிக அளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த மனைவியின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மாணவிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3  மாணவிகளுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.