இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக முன் எப்போதும் இல்லாத வகையில் 95 ரூபாயைத் தாண்டிச் சரிந்துள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், சர்வதேச விவகாரங்களில் அவர் எடுத்து வரும் நிலைப்பாடுகளுமே இந்தச் சரிவுக்குக் காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரூபாயின் மதிப்பு 100-ஐ நோக்கிச் செல்வது வெறும் எண்கள் கிடையாது, இது வரப்போகும் மிகப்பெரிய பணவீக்கத்திற்கான அபாய எச்சரிக்கை என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், மோடி அரசு சரியான வியூகம் இல்லாமல் செயல்படுவதால் உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் விண்ணைத் தொடும் என்றும், இதனால் சாமானிய மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) இந்த வீழ்ச்சியால் பலத்த அடி வாங்கும் என்றும், முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேறுவது பங்குச் சந்தையைப் பாதாளத்திற்குத் தள்ளும் என்றும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
“அரசு இதைச் சாதாரணமான விஷயம் என்று சொல்லலாம், ஆனால் நிதர்சனம் வேறாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
