கேரள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்குத் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் அரசியலை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். பத்தனம்திட்டாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு ஆன்மீகத்தின் மீது உண்மையான பற்று கிடையாது என்றும், தேர்தல் நேரத்தில் ஓட்டு கிடைக்குமென்றால் மட்டுமே அவர் கோவில்களைப் பற்றிப் பேசுவார் என்றும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நேற்று பாலக்காட்டில் பேசிய பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் நிலவும் முக்கியப் பிரச்சனைகள் மற்றும் அங்கு நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து வாய் திறக்காதது ஏன்? என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவும், கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணியும் (LDF) கைகோர்த்துச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, மத்திய புலனாய்வு அமைப்புகள் தன்னை 55 மணிநேரம் விசாரணை செய்தபோதும், 36 வழக்குகளைப் பதிவு செய்தபோதும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று வினவினார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கத்தைத் திருடிவிட்டு பித்தளையை வைத்ததாகக் கூறப்படும் புகாரில் இடதுசாரி அரசுக்கு பாஜக முட்டுக் கொடுத்து வருவதாகவும், இதுவே இவ்விரு கட்சிகளுக்கும் இடையே உள்ள ‘ரகசிய உறவுக்கு’ச் சான்று என்றும் அவர் பேசினார்.

ஓட்டுக்காக மட்டுமே மதத்தையும் கோவிலையும் பயன்படுத்தும் மோடியின் தந்திரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.