இன்றைய நவீன அவசர உலகில் வேகவேகமாகச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உண்பது மற்றும் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை உட்கொள்வது ஆகியவை உலகளாவிய பொதுவான பிரச்னையாக மாறிவிட்டன. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக ஜப்பானில் உள்ள ‘ஓகினாவா’ என்ற தீவில் வாழும் மக்கள், தங்களின் ஒரு பிரத்யேக பாரம்பரிய பழக்கவழக்கத்தால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு நோயுமின்றி ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது ஒட்டுமொத்த உலகையும், சமூக வலைத்தளங்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள அந்த ஜப்பானிய அற்புத முறைக்கு ‘ஹாரா ஹாச்சி பூ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜப்பானிய மொழியில் ‘ஹாரா ஹாச்சி பூ’ என்ற வார்த்தையின் எளிய அர்த்தம், “வயிறு 80 சதவீதம் நிறைந்த உடனே சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்” என்பதாகும். இந்த அரிய தத்துவம் கன்பூசியஸின் பழங்கால போதனைகளிலிருந்து உருவானது என்று கூறப்படுகிறது. தற்போது இது ஓகினாவா மக்களின் கலாச்சாரத்தின் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ளது. உணவை உண்ணும்போது அளவுக்கு அதிகமாக உட்செலுத்துவதைத் தடுத்து, வயிற்றின் 20 சதவீத பகுதியை எப்போதும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக இந்த மந்திர வார்த்தை அங்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆரோக்கிய நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வழக்கம் ‘மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ (Mindful Eating) எனப்படும் விழிப்புணர்வுடன் கூடிய உணவு உண்ணும் முறையோடு நேரடியாகத் தொடர்புடையது. உணவை நன்றாக மென்று, நிதானமாக ரசித்துச் சாப்பிடும்போது, வயிறு நிறைந்துவிட்டதற்கான சமிக்ஞை மூளைக்குச் சரியான நேரத்தில் சென்றடைகிறது. இதனால் தொலைக்காட்சி அல்லது மொபைல் போன்களைப் பார்த்துக்கொண்டே தேவையின்றி அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் தடுக்கப்பட்டு, உடலின் இயற்கையான பசி உணர்வை நம்மால் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் க்ளீவ்லேண்ட் கிளினிக் நடத்திய ஆய்வறிக்கையின்படி, இந்த 80 சதவீத உணவுப் பழக்கமானது மனித உடலின் வளர்சிதை மாற்ற அழுத்தத்தைக் பெருமளவு குறைக்கிறது. இதனால் வயோதிகக் காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு ஆயுள் நீடிக்கிறது. உடலுக்குக் கடுமையான உணவுக்கட்டுப்பாடுகளை விதிக்காமல், அளவோடு உண்டு, முறையான உடற்பயிற்சிகளுடன் இந்த ஜப்பானிய ‘ஹாரா ஹாச்சி பூ’ முறையைப் பின்பற்றினால், எவரும் 100 வயது வரை நோய் நொடியின்றி வாழ முடியும் என்பது தற்பொழுது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
