திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, அக்கட்சியினரே திடீரென முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. குறிப்பாக, வெள்ளக்கோயில் பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் ரசிகர் மன்றத்திற்காக உழைத்த தங்களுக்கு, கட்சியில் உரிய பொறுப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகத் தொண்டர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

​தங்களுக்கு இளைஞரணி பதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் கோஷமிட்டதால், விழா மேடையிலேயே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கட்சியின் அடிப்படைத் தூண்களாக இருந்த பழைய நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு, புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக எழுந்துள்ள இந்தப் புகார், தவெக தலைமையைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில காலத்திலேயே நிர்வாகிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல், அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.