புதுடெல்லியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனை மருத்துவர்கள், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியினருக்குப் பிறந்த இந்தக் குழந்தைக்கு, ரத்த ஓட்டத்தைச் சீரமைக்கும் அரிய வகை பிறவி இதயக் குறைபாடு இருப்பது கருவிலேயே கண்டறியப்பட்டது.
மேலும் குழந்தை பிறந்தவுடன் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர் கே.எஸ். அய்யர் தலைமையிலான குழுவினர், குழந்தை பிறந்த மறுநாளே சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த சவாலான திறந்த நிலை இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இந்த நுணுக்கமான சிகிச்சையின் மூலம் குழந்தையின் இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீரமைக்கப்பட்டு, குழந்தையின் உயிர் காக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் 11 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை, தற்போது முழு ஆரோக்கியத்துடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 10,000 குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய இத்தகைய பாதிப்பை, அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவர்களின் துரிதமான செயல்பாட்டின் மூலம் குணப்படுத்தியிருப்பது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இச்சம்பவம் மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
