புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றான தட்டாஞ்சாவடி தொகுதி பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி, ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், அவர் மங்கலம் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியைத் துறக்க முடிவு செய்துள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, இதற்கான அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தைச் சட்டப்பேரவைத் தலைவரிடம் அவர் வழங்க உள்ளார்.
ரங்கசாமியின் ராஜினாமாவைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி முன்னதாகவே அறிவித்துள்ளார்.
இதனால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
