சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் சாந்தி நகர் பாடசாலை தெருவில் ராஜாமணி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திருச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு சங்கரம்மாளுக்கு கண் சிகிச்சை செய்து கொண்டு இருவரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் தங்கசாலை பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் செல்லும் மாநகர பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜாமணி வைத்திருந்த பை திடீரென காணாமல் போனது. அதில் 1 லட்ச ரூபாய் பணம், 1 பவுன் தங்க மோதிரம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட சில ஆவணங்கள் இருந்துள்ளது. பையை பேருந்தில் இருந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து ராஜாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.