தமிழக முதல்-அமைச்சர் விஜய், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். டெல்லியில் நேற்று இரவு தங்கிய அவர், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள உலகப் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூரு வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குக் காரில் புறப்பட்டார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் கோவிலுக்குச் சென்ற அவர், அம்மனை நெகிழ்ச்சியோடு வழிபட்டார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சாமி தரிசனத்தின் போது, கோவிலுக்கு 1.5 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான வெள்ளி வாள் ஒன்றை அவர் காணிக்கையாக வழங்கினார்.

கோவில் தரிசனம் முடிந்ததும், காரில் ஏறிய முதல்-அமைச்சர் விஜய், திடீரென ஓட்டுநரிடம் “காரை நானே ஓட்டவா?” எனக் கேட்டுவிட்டு, ஓட்டுநர் இருக்கைக்கு மாறி காரை அவரே இயக்கத் தொடங்கினார். இசட் பிளஸ் (Z+) பாதுகாப்புப் பிரிவில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரே காரை ஓட்டிச் சென்றதைக் கண்ட அங்கிருந்த பக்தர்களும், அரசு அதிகாரிகளும் பெரும் ஆச்சரியமடைந்தனர்.

அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புப் படையினரின் கன்வாய் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி உடுப்பி மாவட்ட போலீசார் மூகாம்பிகை கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அவர் பயணித்த பாதை மூகாம்பிகை வனப்பகுதி மற்றும் சவுபர்ணிகா ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி என்பதால், வனத்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வழியெங்கும் முதல்-அமைச்சர் விஜய்யைக் காண்பதற்காகப் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.