கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி மா்மமாக உயிரிழந்த பெண் பாகத்துன்னிஷா (48) வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முதலில் விபத்து என சந்தேகப்பட்ட இந்த சம்பவம், தற்போது கொலை என்று மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையின் தீவிர விசாரணையில், அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதுடன், அதற்குப் பின்னணி கணவனின் தகாத உறவு என தெரிய வந்துள்ளது.

பரங்கிப்பேட்டை ஜெயின் பாவா தெருவைச் சேர்ந்த பாகத்துன்னிஷா, தனியார் ஹோட்டலில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், அவரது மொபெட் அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இது தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு, அவரது கணவர் ஷேக் இஸ்மாயிலிடம் விசாரித்த போது, அவர் வேலை செய்த உணவகத்தில் வீரம்மாள் என்ற பெண்மணியுடன் தகாத உறவு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த உறவை மனைவி தொடர்ந்து கண்டித்ததாகவும், இருவரிடமும் சண்டைகள் ஏற்பட்டதாகவும் தெரிந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த வீரம்மாள், இந்த விவகாரத்தை தனது மகன் அகில்ராஜிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், அகில்ராஜும், அவரது நண்பர் அஜயும், பாகத்துன்னிஷா வீட்டுக்குச் செல்லும் வழியில் வழிமறித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

இதற்குப் பின் போலீசார் கொலை வழக்காக மாற்றி, ஷேக் இஸ்மாயில், வீரம்மாள், அகில்ராஜ், அஜய் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தி, இந்த கொடூரக் கொலை சம்பந்தமாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.