இன்றைய காலகட்டத்தில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஒரு கப் தேநீர் அல்லது குடிநீர் பாட்டில் வாங்க வேண்டும் என்றாலே குறைந்தபட்சம் 10 ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஒரு இடத்தில் வெறும் 1 ரூபாய்க்கு நிறைவான காலை உணவு கிடைக்கிறது என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘ராம்பாபு அண்ணா’ என்பவர், கடந்த 25 ஆண்டுகளாகத் தனது கடையில் வெறும் 1 ரூபாய்க்கு இட்லி, உப்புமா மற்றும் போஹா போன்ற உணவு வகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்கள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற நன்னோக்கிலேயே இவர் இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
சிறுவயதில் வறுமையின் காரணமாகப் பல நாட்கள் காலை உணவின்றித் தவித்த ராம்பாபு அண்ணா, பிறரும் அதுபோன்ற நிலையைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே இந்தக் கடையைத் தொடங்கியுள்ளார். இலவசமாகக் கொடுத்தால் மக்களின் சுயமரியாதை பாதிக்கப்படலாம் என்பதால், பெயரளவில் 1 ரூபாய் கட்டணத்தை நிர்ணயித்து இந்த உணவை வழங்கி வருகிறார்.
துவக்கத்தில் நஷ்டத்தையும் பலரின் விமர்சனங்களையும் சந்தித்த போதிலும், லாபத்தை எதிர்பார்க்காமல் மக்கள் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இவர் இயங்கி வருகிறார். அதிகாலையிலேயே கடையைத் திறந்துவிடும் இவர், உணவின் சுவையிலும் தூய்மையிலும் எவ்வித விட்டுக் கொடுப்பும் இன்றிச் சிறப்பான சேவையை அளித்து வருகிறார்.
தற்போது தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் எனப் பலரும் காலையிலேயே இவரிடம் உணவருந்தக் கூடுகின்றனர். ராம்பாபு அண்ணாவின் இந்த மனிதநேயப் பணியைப் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போது இணையவாசிகளிடையே வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
