மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் வங்கியின் நிதி வசூல் ஊழியராக இருந்த கணேஷ் சவான், தான் இறந்துவிட்டதாக நாடகமாட முயன்ற வழக்கில் ஒருவரைக் காரில் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவான், தான் செய்திருந்த ₹1 கோடி ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெற்று, வீட்டுக் கடனை அடைப்பதற்காகவே இந்தக் கொடூரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். தனது சொந்த மரணத்தை நிரூபிக்க, ஒரு மனித உயிரைப் பலி கொடுக்கவும் அவர் துணிந்துள்ளார்.

திட்டத்தின்படி, சனிக்கிழமை கோவிந்த் யாதவ் என்ற நபர் காரில் லிஃப்ட் கேட்டு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த யாதவைக் காரில் ஏற்றிக்கொண்ட சவான், வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு யாதவ் உறங்கியபோது, சவான் அவரை ஓட்டுநர் இருக்கைக்கு மாற்றி, சீட் பெல்ட் அணிவித்துள்ளார். தான் இறந்துவிட்டதை நம்பவைப்பதற்காக, தனது கைச் சங்கிலி போன்ற பொருட்களையும் யாதவ் கையில் போட்டுவிட்டு, அந்தக் காருக்குத் தீ வைத்துள்ளார்.

எரிந்த காரில் இருந்து மீட்கப்பட்ட சடலம் கணேஷ் சவானுடையது என ஆரம்பத்தில் காவல்துறை சந்தேகித்தது. ஆனால், திங்களன்று விசாரணையின்போது, சவான் தனது பெண் தோழிக்கு வேறொரு எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பியது வெளிச்சத்துக்கு வந்தது. இதன் மூலம் சவான் உயிரோடு இருப்பது உறுதியானது. பின்னர், செல்போன் சிக்னலைக் கண்காணித்த காவல்துறை, கோல்ஹாபூர் வழியாக விஜய்துர்க் சென்ற சவானைக் கைது செய்தது. விசாரணையில், காப்பீட்டுப் பணத்துக்காகவே யாதவைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்ட நிலையில், சவான் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.