கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நாகர்கோவிலில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் பெண்ணுடன் முன்னாள் ராணுவ வீரருக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பின்னர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஹோட்டலை மூடி தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை அடகு வைத்து பணம் பெற்றார்.
ஆனால் அந்த பணத்தை வைத்து எந்த தொழிலும் செய்யாததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தனது செல்போன் பழுது ஆனதால் தனது சிம் கார்டை கணவரின் செல்போனில் பொருத்தி உபயோகப்படுத்தி வந்தார்.
அந்த செல்போனில் முன்னாள் ராணுவ வீரர் ஹோட்டல் பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த பல புகைப்படங்கள் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் தனது கணவரை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் தனது மனைவி இறந்து விட்டதாக உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததால் உறவினர்கள் பதறியடித்து வீட்டிற்கு ஓடி வந்தனர்.
பின்னர் அது தவறான தகவல் என்பதை அறிந்து உறவினர்கள் முன்னாள் ராணுவ வீரரை கண்டித்தனர். இது குறித்து ராணுவ வீரரின் மனைவி காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
