கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான அனுபவம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, கார் ஒன்றில் வந்த நபர் நிர்வாண கோலத்தில் பின்தொடர்ந்துள்ளார். பயத்தில் உறைந்துபோன அந்தப் பெண், தனது செல்போனில் இதைப் படம்பிடித்தபடியே “உதவுங்கள்.. உதவுங்கள்.. நான் இவ்வளவு கத்தியும் யாரும் கேட்கவில்லையே” என்று கண்ணீர் மல்கக் கதறும் சத்தம் பார்ப்பவர்களின் இதயத்தை ரணமாக்குகிறது.

​அந்த நபர் காரின் உள்ளே இருந்தபடியே அப்பெண்ணை வக்கிரமாக அழைத்ததும், சுற்றியிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர்கூட உதவ முன்வரவில்லை என்பதும் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டாக உள்ளது. ஏற்கனவே சர்ச் ஸ்ட்ரீட், கோரமங்களா போன்ற பகுதிகளில் இது போன்ற சீண்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த வக்கிர நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.