ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பஜாஜ் வாகன விற்பனையகத்தின் முன்பாக, விரக்தியடைந்த நபர் ஒருவர் தனது சொந்த இ-ரிக்‌ஷாவையே தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோகன் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், சமீபத்தில் வாங்கிய தனது புதிய இ-ரிக்‌ஷாவில் பேட்டரி சார்ஜ் ஏறுவதில் தொடர்ந்து தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்பதாகவும், இதனால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பலமுறை ஷோரூமை அணுகியும், ஊழியர்கள் உரிய தீர்வு காணவோ அல்லது வாகனத்தை மாற்றிக் கொடுக்கவோ முன்வராததால், ஆத்திரமடைந்த அவர் வாகனத்தின் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்தபோது அங்குள்ளவர்கள் அதைப் படம்பிடித்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“>

இந்த தீப்பிழம்புகள் வேகமாகப் பரவியபோது, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இ-ரிக்‌ஷா முழுமையாக சேதமடையவில்லை என்றாலும், அந்த நபரின் இந்த அதிரடி செயல் நுகர்வோர் சந்திக்கும் இன்னல்களையும் நிறுவனங்களின் மெத்தனப் போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.