தமிழக சட்டசபை தேர்தலின் போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்களிப்பதை வீடியோ எடுக்கவும் தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதை மீறி, கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி விக்னேஸ்வரன் என்பவர், தான் வாக்களித்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பானை சின்னத்திற்கு வாக்களித்த அந்த வீடியோ வைரலானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பண்ருட்டி தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக விக்னேஸ்வரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

உடனடியாக அவரை அதிரடியாக கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையையும் மீறி ஆளுங்கட்சி நிர்வாகியே இத்தகைய செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.