ஊழியர்களின் ஓய்வுக்கால நிதி பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், தற்போது ஒரு புதிய மாற்றத்தைக் கடந்து செல்லும் நிலையில் உள்ளது. இதுவரை, பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை முழுமையாக பெறுவது ஓய்வு பெறும் போது அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இல்லாதபோது மட்டுமே சாத்தியமானது. ஆனால், தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு பிஎஃப் தொகையை எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டாலோ என ஈபிஎஃப்ஓ ஆலோசித்து வருகிறது என்பதுதான் தற்போதைய பரபரப்பான தகவல்.
இந்த மாற்றம் குறித்து பலரும் நன்மையும், அபாயமும் இரண்டையும் சுட்டிக்காட்டியுள்ளனர். எப்போதும் மாத சம்பளத்தில் இருந்து ஊழியர் தரும் 12% தொகைக்கு, அதேபோல முதலாளியும் 12% அளவுக்கு பங்களிக்கிறார். அந்த தொகையுடன் ஆண்டுதோறும் 8.15% வட்டி சேர்க்கப்படுகிறது. இதுதான் ஓய்வு காலத்துக்கு நிதி பாதுகாப்பு தரும் கருவியாக செயல்படுகிறது. தற்போதைய நிலைப்படி, வீடு கட்டுதல், திருமணம், கல்வி, மருத்துவ செலவுகள் ஆகிய அவசர தேவைகளுக்கு பிஎஃப் தொகையில் இருந்து பகுதி தொகையை மட்டுமே எடுக்கலாம். ஆனால் முழு தொகையை 10 வருடங்களுக்கு ஒருமுறை எடுக்கலாம் என்கின்ற மாற்றம், புதிய நிதி சுதந்திரத்தையும், அதேசமயம் ஓய்வுக்கால பாதுகாப்பில் குறைபாட்டையும் உருவாக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
அரசின் புதிய ஆலோசனைப்படி, முழு தொகையையோ அல்லது 60% வரையிலான ஒரு பகுதிநிதியையோ எடுக்க அனுமதி அளிக்கலாம் என்பதுபோன்ற பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளன. இது இளம் ஊழியர்களுக்கு வாழ்க்கை இலக்குகளை விரைவாக அடைய உதவலாம். ஆனால், நீண்டகால சேமிப்பை துரிதமாக திரும்பப்பெறும் சூழ்நிலையில், ஓய்வு காலத்தில் நிதி பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், நிதி விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால், அரசு அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
