உ.பி. மொராதாபாத் குடியிருப்பில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய தந்தை-மகன்மீது  தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிய போலீசார், தந்தை மற்றும் மகன் இருவரையும் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர்.

தந்தை மற்றும் மகன் கைது :

மொராதாபாத்தில் உள்ள பகத்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதன்பூர் அலிகஞ்ச் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜவுளி வியாபாரி ரயீஸ் என்பவரது வீட்டில் பாகிஸ்தான் கொடி காட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது வீட்டின் மேற்கூரையில் பாகிஸ்தான் கொடி பறந்து கொண்டிருந்ததை பார்த்தனர். போலீசார் ஆதாரங்களுக்காக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து பின்னர் கொடியை அகற்றினர். இதையடுத்து, ரயீஸ் மற்றும் அவரது மகன் சல்மான் இருவரும் சம்பவ இடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டனர்.

தேசத்துரோக வழக்கு :

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 153 ஏ மற்றும் 153 பி ஆகியவற்றின் கீழ் தேசத்துரோக குற்றத்திற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் விசாரணை மட்டுமின்றி, உள்ளூர் புலனாய்வு பிரிவும் (எல்ஐயு) அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். இவர்களது வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் இதுவரை அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.