பெங்களூருவில் ஆஷா மானே என்ற பெண் நள்ளிரவு 11:45 மணிக்கு 38 கி.மீ. பயணத்திற்காகப் புக் செய்த ராபிடோ (Rapido) வண்டி, நடுவழியில் பள்ளத்தில் மோதிச் சங்கிலி அறுந்து பழுதாகி நின்றது. அந்தப் பகுதி இருட்டாக இருந்ததால், பொதுவாக ஓட்டுநர் பயணத்தை ரத்து செய்வார். ஆனால், அந்த ஓட்டுநர் கவலைப்பட வேண்டாம் என்றும், “சரிசெய்து உங்களை வீட்டில் இறக்கிவிடுகிறேன்” என்றும் உறுதியளித்தார்.
இதையடுத்து, ஆஷா தனது செல்போன் டார்ச் வெளிச்சத்தைப் பிடித்து அவருக்கு உதவினார். எந்தவித சலிப்பும் இன்றி, பத்து நிமிடங்களுக்குள் அந்த ஓட்டுநர் வண்டியைச் சரிசெய்து, ஆஷாவை அதிகாலை 1 மணிக்கு வீட்டிற்குப் பத்திரமாகச் சேர்த்தார். இது மனிதநேயத்தை மீட்டு எடுக்கும் சம்பவம் என்று பாராட்டிய ஆஷா, அந்த ராபிடோ ஓட்டுநரின் அர்ப்பணிப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அவரது பதிவுக்குக் கருத்துத் தெரிவித்த ராபிடோ நிறுவனம், “அனைத்து ஹீரோக்களும் கோட் அணிவதில்லை, சிலர் நள்ளிரவில் பைக் சங்கிலியைச் சரிசெய்து, நீங்கள் பாதுகாப்பாக வீடு சேர்வதை உறுதி செய்கிறார்கள்” என்று கூறி, அந்த ஓட்டுநருக்குப் பாராட்டு கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளது.
