திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களுக்கெல்லாம் முன்னதாக, சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்ட உலகின் முதல் விஷ்ணு ஆலயமாக ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோயில் கருதப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது.

சோமுகன் என்ற அசுரன் வேதங்களைக் கவர்ந்து கடலுக்குள் மறைத்து வைத்தபோது, பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து அவற்றை மீட்டு வந்து பிரம்மாவுக்கு உபதேசித்த தலமாக இது போற்றப்படுகிறது. தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் 29 அடி நீளத்தில் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கநாதர் சிலை, ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி மடியில் வீற்றிருக்கும் காட்சியுடன் அருள்பாலிக்கிறது.

மனிதர்களை நல்வழிப்படுத்துவது மட்டுமின்றி மக்களின் பசி தீர்க்கும் இடமாகவும் கோயில்கள் விளங்கியதற்கு இக்கோயிலில் உள்ள 3 அடுக்கு நெற்களஞ்சியமே சான்றாகும். வறட்சி காலத்தில் மக்களுக்கு வழங்குவதற்காக நெல், கம்பு, வரகு போன்ற தானியங்கள் இதில் சேகரிக்கப்பட்டன. மேலும், தட்டினால் இசை எழுப்பும் அபூர்வமான இசைக் கற்களால் வடிக்கப்பட்ட ராமபிரான் சிலையும் இக்கோயிலின் கலைச் சிறப்புகளில் ஒன்றாகும்.

பிரம்மனுக்குப் பெருமாள் வேதங்களை உபதேசித்த தலம் என்பதால், இங்கு வந்து வழிபட வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். அதுமட்டுமின்றி, திருமண யோகம் மற்றும் புத்திர பாக்கியம் அளிக்கும் புண்ணியத் தலமாகவும் இது விளங்குவதால், ஆண்டுதோறும் ஏராளமான திருமணங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன.

பல்வேறு ஆன்மிக மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி நிற்கும் இக்கோயிலில், சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர் செய்யப்பட்டு அண்மையில் திருத்தேர் வெள்ளோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’ முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்து நவதானிய பெருமாளின் அருளைப் பெற்றுச் சென்றனர்.