தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21-ஆம் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள பாரபத்தியில் சிறப்பாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டை முன்னிட்டு, மதுரை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பொதுமக்களை வரவேற்க, த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமான பேனர்கள், போஸ்டர்களை பெருமளவில் அச்சடித்து, நகரம் முழுவதும் ஒட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில், “மாநாடு ரெடி மாமே” எனும் வாக்கியத்துடன் கூடிய பேனர்கள் பெரிதும் கவனத்தை பெற்றுள்ளன.
இதற்கிடையே, த.வெ.க. மாநாடு நடைபெற உள்ள பாரபத்தி கிராமத்தில், அங்குள்ள அஜித் ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் நடந்துள்ள சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அஜித்தின் பிரபலமான படங்கள்– அட்டகாசம், பில்லா, அமர்க்களம், ஆரம்பம், தீனா ஆகியவற்றின் போஸ்டர்களுடன் சேர்த்து, ஒரு விஜய் திரைப்பட போஸ்டரும் வைக்கப்பட்டு உள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல விருப்பத்தை ஏற்படுத்தி, “அறம் வளர்த்த நெஞ்சங்கள்” என பலர் பாராட்டுகின்றனர். நட்சத்திர ரசிகர்களுக்கிடையிலான இணக்கம், ரசிகர் கலாச்சாரத்தில் ஒரு புதிய பக்கம் திருப்புவதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
