தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்” என்று ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறார்கள். இது திமுக தரப்பைச் செம்ம கடுப்பாக்கியுள்ள நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “வரும் தேர்தலில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.

எனவே, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை” என்று அவர் ஓப்பனாகவே தெரிவித்துவிட்டார். மேலும் ஒருபடி மேலே போய், “உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் கேளுங்கள், செய்து தருகிறோம். ஆனால் அதிகாரத்தில் பங்கு கிடையாது” என்று காங்கிரஸை நோஸ் கட் செய்துள்ளார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னரே அமைச்சரின் இந்த அதிரடித் தாக்குதல் காங்கிரஸ் கூடாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.