வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுடன் திருமணம் செய்து கொள்வது பலருக்கும் ஒரு கனவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய திருமண வாழ்க்கையில் நுழையும் பல பெண்கள், தனிமை மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக சமீபத்தில் ஒரு பகிரப்பட்ட கதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மேலும் கணவருடன் வெளிநாடு சென்ற பெண் ஒருவர், அங்கு தான் அனுபவித்த கட்டாய வீட்டு வேலைகள் மற்றும் குடும்பத்தாரின் கடும் கட்டுப்பாடுகளைக் கண்டு, அத்திருமண பந்தத்தில் இருந்து வெளியேறி இந்தியா திரும்பியுள்ளார். வெளிநாட்டின் நவீன வாழ்க்கை என்று கூறப்பட்டாலும், அங்கு தான் “24/7 ஊதியம் பெறாத பணியாளராக” நடத்தப்பட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதனால் வாழ்க்கை என்ற பெயரில் வெளியுலகிற்குத் தெரிந்த சொகுசு வசதிகளுக்குப் பின்னால், பல பெண்கள் சமூகத் தொடர்பு இன்றி தனிமையில் வாடுவதும், நிதி சுதந்திரம் இன்றி குடும்பத்தாரின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கிக் கிடப்பதும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இத்தகைய சூழலில், குடும்ப அழுத்தம் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை மீறி, தனது சொந்த மகிழ்ச்சிக்காக துணிச்சலாக முடிவெடுக்கும் பெண்கள் பலருக்கும் இது ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உரிமையையும் மதிக்கும் ஆரோக்கியமான உறவே தேவையே தவிர, வெளிநாட்டு வாழ்க்கை என்ற மாயைக்காக எதையும் இழக்க வேண்டியதில்லை என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
