நம்ம ஊர் ஆட்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கோ அல்லது சுற்றுலாவுக்கோ போகும்போது, அங்கே நம் நாட்டின் கலாச்சாரத்தையும் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டியது அவசியம். ஆனால், சமீபகாலமாக வைரல் ஆக வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொள்வது கவலையளிக்கிறது. குறிப்பாக, வெளிநாட்டின் பரபரப்பான சாலையில் நடனம் ஆடுவதோடு மட்டுமல்லாமல், அங்கு செல்லும் ஒரு பெண்ணைத் தாக்கும் அளவுக்கு இந்த நபர் சென்றிருப்பது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெரிய அசிங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது சில இனவெறித் தாக்குதல்கள் நடக்கும் சூழலில், இப்படிப்பட்ட கோமாளித்தனமான செயல்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது.

​நமக்கு என்று ஒரு தனிப்பட்ட ஒழுக்கமும், பொது இடங்கள் குறித்த புரிதலும் (Civic Sense) மிக முக்கியம். ஊர்ல தான் இப்படிச் செய்றாங்கன்னா, வெளிநாட்டுக்கு போன பிறகும் அதே புத்தியைக் காட்டுவது அந்த நாட்டை மட்டுமல்ல, நம் நாட்டையுமே சிறுமைப்படுத்துவது போலாகும். ஒரு பெண்ணிடம் வன்முறையைக் காட்டிவிட்டு அதை வேடிக்கையாக நினைக்கும் இந்த நபரைப் போன்றவர்களால், அங்கேயே தங்கி கண்ணியமாகப் பிழைப்பு நடத்தும் மற்ற இந்தியர்களும் சேர்த்து அவமானப்பட வேண்டியுள்ளது. இது போன்ற ஆட்களைக் கண்டிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.