விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி ஆகிய இருவரும் இந்தியாவில் பொருளாதாரக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, தற்போது வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமீபத்தில் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட லலித் மோடி, “நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள்” என்று கிண்டலாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இவர்களை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர முடியாதது ஏன் எனப் பொதுமக்கள் மத்தியிலும் கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், தப்பியோடிய இருவரையும் இந்தியா கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்காகப் பல்வேறு வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விரைவில் அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
