உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் செய்தித் தாள் வாசிப்பதைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் சுழற்சி முறையில் செய்திகளை வாசிக்க வேண்டும்.

இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் எப்போதும் மொபைல் போன் திரைகளையே பார்த்துக் கொண்டிருப்பதால், இந்தச் செய்தித் தாள் வாசிப்புப் பழக்கம் அவர்களது கவனத்திறனை அதிகரிப்பதோடு, பொது அறிவை மேம்படுத்திப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

செய்தி வாசிப்பதன் மூலம் மாணவர்களுக்கு மொழிப்புலமை அதிகரிப்பதோடு, உள்ளூர் முதல் உலகச் செய்திகள் வரை தெரிந்து கொள்வதால் சமூகப் பொறுப்புள்ள குடிமகன்களாக வளரவும் இது வழிவகை செய்யும்.

அத்துடன், வாரந்தோறும் நூலகத்திலிருந்து மாணவர்களுக்குக் கதைகள், நாவல்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்களை வழங்கி, அவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் முடிவெடுக்கும் திறனும், சுய சிந்தனையும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.