வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வடசென்னை’ படத்தின் கதைக்களத்தை ஒட்டி உருவாகும் இப்படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை யோகலட்சுமி, சிம்பு மற்றும் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
‘ஹார்ட் பீட்’ வெப் சீரிஸ் மூலம் புகழ்பெற்ற யோகலட்சுமி, இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளது.இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரகனி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிம்புவின் 49-வது படமாக உருவாகும் ‘அரசன்’, தனுஷின் வடசென்னை உலகத்தோடு தொடர்புடையது என்பதால் கதை குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக சிம்பு – வெற்றிமாறன் – அனிருத் ஆகிய மூவர் கூட்டணி முதன்முறையாக இணைவது ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
