தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா நகருக்குச் சுற்றுலா வந்த இளைஞர்கள் குழு ஒன்று, தாங்கள் தங்கியிருந்த தங்குமிடத்தை (Homestay) மிக மோசமான முறையில் சேதப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு ஹோம்ஸ்டேயில் தங்கியிருந்த இளைஞர்கள் சிலர், தங்களின் அழுக்கு காலணிகளுடன் படுக்கைகள் மற்றும் போர்வைகள் மீது ஏறி குதித்து அட்டகாசம் செய்கின்றனர். வேண்டுமென்றே போர்வைகளை கீழே இழுத்துப் போட்டும், அறையை அசுத்தப்படுத்தியும் அவர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டனர்.
வீடியோவை பதிவு செய்த இளைஞர் இந்தியில் பேசுகையில், “ஆக்ரா சுற்ற வந்தோம், இதைப் பாருங்கள்” எனக் கூறுகிறார். மேலும், அந்த அறையின் வாடகை வெறும் 500 ரூபாய் மட்டுமே என்பதை கிண்டல் செய்யும் விதமாக, “சில் செய்தோமா இல்லையா?” (Chill kiya ki nahi?) என்று தனது நண்பரிடம் கேட்கிறார். ஒருகட்டத்தில், அந்த அறையிலிருந்த மின்விளக்கை (Bulb) கூட தாங்கள் திருடிவிட்டதாக அந்த இளைஞர் பெருமையுடன் கூறுகிறார்.
இந்த வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. குறைந்த விலையில் தங்குமிடம் கிடைக்கிறது என்பதற்காக, ஒருவரின் உடைமைகளைச் சேதப்படுத்துவது முறையற்ற செயல் என்றும், இத்தகைய சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் சமீபகாலமாகச் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மும்பையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சிலர் தொந்தரவு கொடுத்த வீடியோ வைரலான நிலையில், தற்போது ஆக்ரா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Someone gives you space at such a low cost at a world famous tourist spot and this is the behaviour. Running over beds with shoes, damaging property, zero civic sense. Paying 500 and still stealing things and trashing the room. Hope they are identified and held accountable. pic.twitter.com/b79a6jmIu4
— Nikhil saini (@iNikhilsaini) January 21, 2026
