தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரிக்கு வருகை தந்த விஜய்க்கு, அவரது தொண்டர்களும் ரசிகர்களும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது ரோட்ஷோவில் திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த விஜய், வெயிலின் தாக்கத்தால் சோர்ந்து காணப்பட்டார். இதைப் பார்த்த ஒரு பெண்மணி, சட்டென்று தான் வைத்திருந்த குளிர்ச்சியான நுங்குகளை விஜய்க்கு அன்புடன் வழங்கினார்.
தொண்டர்கள் கொடுத்த பூச்செண்டுகள், மாலைகளைத் தாண்டி, அந்தப் பெண் கொடுத்த இந்த ‘இயற்கை குளிர்ச்சி’ விஜய்யை வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் பெண்ணின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போன விஜய், புன்னகையுடன் அந்த நுங்கைப் பெற்றுக் கொண்டார். “அரசியல் தலைவராக இருந்தாலும், எங்க வீட்டுப் பிள்ளை” என்கிற பாசத்தில் அந்தப் பெண் செய்த இந்தச் செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், இணையத்திலும் தற்போது செம வைரலாகி வருகிறது. மக்கள் தலைவராக மாறும் பயணத்தில் இதுபோன்ற எதார்த்தமான அன்பே விஜய்க்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
