சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் நடிகரும், பிக்பாஸ் மூலமாகப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவருமான தினேஷ், தற்போது தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். “ஏன் விஜய்? ஏன் தவெக?” என்கிற கேள்விக்கு தினேஷ் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்துவிட்டு, ஒரு தலைவனாக உருவெடுப்பதற்கு விஜய் செய்துள்ள தியாகங்களே தான் ஈர்க்கப்பட முதல் காரணம் என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
விஜய் முன்னெடுக்கும் இந்த எழுச்சிமிகு அரசியலில் பல தடைகள் வரும் என்பதை தான் அறிவதாகவும், ஆனால் அந்தத் தடைகளைத் தாண்டி மக்களிடம் கொண்டு செல்லும் தன்னம்பிக்கை விஜய்யிடம் இருப்பதாகவும் தினேஷ் புகழாரம் சூட்டியுள்ளார். ஏற்கனவே பல சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் விஜய்யின் பக்கம் சாய்ந்து வரும் நிலையில், தினேஷின் இந்த எண்ட்ரி தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “தளபதியின் தளபதியாகக் களமிறங்கிவிட்டேன்” என்கிற பாணியில் தினேஷ் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
