சென்னை உயர்நீதிமன்றத்தில், தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்கக் கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், அதில் குறிப்பிட்டுள்ள எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக கடுமையான கண்டனம் வெளியிட்டார்.

இணையதளங்களில் இருந்து அந்தரங்கக் காணொளிகளை நீக்கினாலும், அவை மீண்டும் மீண்டும் வேறு பெயர்களில் பகிரப்பட்டு பரவி வருவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இது ராமாயணத்தில் வெட்டப்படும் ராவணனின் தலையைப் போல, எத்தனை முறை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் முளைப்பது போல உள்ளது என நீதிபதி வேதனையுடன் கூறினார்.

மேலும், “ஆபரேஷன் சிந்து” எனும் சிறப்பு நடவடிக்கையின் போது போலி செய்திகளை பரப்பும் மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை வெளியிடும் பல இணையதளங்கள் முடக்கப்பட்டதுபோல, இந்நிலையில் அந்தரங்க வீடியோக்களை பரப்பும் இணையதளங்களையும் முற்றிலும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் இணையதளங்களில் பெண்கள் எதிர்கொள்கின்ற தனிப்பட்ட உரிமை மீறல்கள், அந்தரங்கத் தன்மை மீறல்கள் மற்றும் சைபர் குற்றங்களின் தீவிரத்தைக் காட்டுகிறது. அரசு மற்றும் இணைய தள நிறுவனங்கள் இவ்வகையான விவகாரங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்படும் நபர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து நீதிமன்றம் முறைப்படுத்தியுள்ளது.