இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் இளைஞர்களுக்கு வழங்கிய ஊக்க உரை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் எந்தப் போட்டியிலும் பங்கேற்காமல், ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த மாணவனாகவே தான் இருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அவ்வாறு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் இளைஞர்கள் எதற்கும் வருத்தப்படத் தேவையில்லை என்றும், விடாமுயற்சியுடன் உழைத்தால் ஒரு நாள் இந்த உலகமே அவர்களை வியப்புடன் வேடிக்கை பார்க்கும் ஒரு தருணம் நிச்சயம் வரும் என்றும் அவர் நம்பிக்கையூட்டினார். வாழ்க்கையில் நமக்கு ஒன்று தேவை என்றால் அதைத் தயக்கமின்றி கேட்க வேண்டும் என்பதே பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களுக்கு முன்வைக்கும் முக்கிய ஆலோசனையாகும்.
இந்நிலையில் “நமக்குத் தேவையானதைக் கேட்கும்போது அவர்கள் மறுத்தால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை, ஆனால் நாம் கேட்டால் அது கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்று எதார்த்தமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், வாய்ப்புகளைத் தேடிப் பெறத் துணிய வேண்டும் என்கிற இவருடைய இந்த உத்வேகமான பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி இளைஞர்களைக் கவர்ந்து வருகிறது.
