பிரபல நடிகர் பொன்னம்பலம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது எக்ஸ் (X) தளத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசிய அவர், “முன்பெல்லாம் விஜய்யை நாங்கள் ‘வா, போ’ என்றுதான் ஒருமையில் அழைப்போம். ஆனால் இப்போது அவர் இருக்கும் இடமும், மக்கள் அவர் மீது வைத்துள்ள மரியாதையும் அவரை ‘விஜய் சார்’ என்றுதான் அழைக்க வைக்கிறது; ரசிகர்களும் நிர்வாகிகளும் அந்த மரியாதையை அவருக்குக் கொடுக்க வேண்டிய சூழல் இப்போது உள்ளது” என்று மிகவும் எதார்த்தமாகத் தெரிவித்துள்ளார்.

​அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசிய பொன்னம்பலம் ஒரு அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளார். “யார் ஆட்சிக்கு வந்தாலும் – அது விஜய்யாக இருந்தாலும் சரி, அதிமுக அல்லது திமுகவாக இருந்தாலும் சரி – அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஆட்சியை விட்டு இறங்க வேண்டும் என்று முதலிலேயே எழுதி கையெழுத்து வாங்கிவிட வேண்டும். தவறு செய்தால் கேள்வி கேட்கும் துணிச்சல் மக்களிடம் இருக்க வேண்டும்” என்று அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இவரது இந்த நேர்காணல், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.