மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கட்சியின் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி அரசு பள்ளி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வைத் தொடங்கி வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மேடையில் த.வெ.க. பெண் நிர்வாகி ஒருவருடன் சினிமா பாடலுக்கு நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, போட்டியில் பங்கேற்று இளைப்பாறிக்கொண்டிருந்த சிறுமிகளின் கால்களை அமைச்சர் அமுக்கிவிட்டதாகவும், சுளுக்கு எடுத்ததாகவும் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு பள்ளி வளாகங்களில் ஆளுங்கட்சியாக இருக்கும் அமைப்புகள் அத்துமீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அமைச்சரின் இத்தகைய நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாகியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இதேபோல், மேலூர் தொகுதி மக்கள் முன்னேற்ற இயக்க தலைவர் மீ.முருகன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும், மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய ஒரு அமைச்சர் பொதுவெளியில் இவ்வாறு நடந்துகொண்டது மனவருத்தத்தை அளிப்பதாகக் கூறி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
