கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரி டயருக்கு காற்று நிரப்பிய போது ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான டயர் பஞ்சர் ஒட்டும் கடை செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான மோகன் குமார் என்ற இளைஞர் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் வேலைக்குச் சேர்ந்துள்ளார். சம்பவத்தன்று கடையில் இருந்த லாரி டயர் ஒன்றிற்கு மோகன்குமார் காற்று நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டயரில் காற்று அழுத்தம் அதிகமானதால், அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன் குமாருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
