குஜராத் மாநிலம் மார்பி மாவட்டத்தில், வெறும் 2,000 ரூபாய் வீட்டு வாடகையைச் செலுத்த முடியாததால், தனது மனைவியையும் 13 வயது சிறுமியான சொந்த மகளையும் வீட்டு உரிமையாளரிடம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கணவனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்து நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிழைப்புத் தேடி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மார்பி நகருக்கு வந்துள்ளனர். அங்கு மாதம் 2,000 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் குடியேறியுள்ளனர். குடும்பத் தலைவருக்குத் தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதால், வீட்டு வாடகையைச் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். வாடகை பாக்கி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.
குடும்பத்தின் இந்த ஏழ்மை நிலையையும், பொருளாதார நெருக்கடியையும் வீட்டு உரிமையாளர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். வாடகை பணத்திற்குப் பதிலாக, அவரது மனைவியையும், மகளையும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு கணவனிடம் கேட்டுள்ளார். இதற்கு அந்தக் காசு வெறி பிடித்த கணவனும் சம்மதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வாடகை வீடு, சொந்த வீடு என பல இடங்களுக்கு அந்தப் பெண்ணையும், 13 வயது 7 மாதங்களே ஆன அவரது சிறுமி மகளையும் அழைத்துச் சென்று வீட்டு உரிமையாளரும், அவரது உறவினரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இந்தக் கொடுமை தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் கடந்த மே 1-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீஸார் பாரதிய போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஒய்.பி. ஜடேஜா கூறுகையில், “வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான கணவன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 55 வயதான வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இக்குற்றத்திற்குத் துணையாக இருந்துவிட்டு தற்போது தலைமறைவாக உள்ள வீட்டு உரிமையாளரின் உறவினர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், குற்றச்சம்பவம் நடந்த இடத்தில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பணத்திற்காகச் சொந்தக் குடும்பத்தையே சீரழித்த கணவனின் இந்த மிருகத்தனமான செயல், இணையத்திலும் பொதுமக்களிடையேயும் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
