ஆந்திர மாநிலத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதை மாற்றி, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அதிரடியான மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் நர்சன்னபேட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குடும்பத்தில் 3-வதாகப் பிறக்கும் குழந்தைக்கு உடனடியாக ₹30,000 மற்றும் 4-வதாகப் பிறக்கும் குழந்தைக்கு ₹40,000 நிதியுதவி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்; இது தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 2-வது குழந்தைக்கு ₹25,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ள நிலையில், தற்போதைய சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் தம்பதியினர் ஒரே ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால் மக்கள் தொகையில் சமநிலை பாதிக்கப்பட்டு, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நாயுடு எச்சரித்துள்ளார்.
ஒரு காலத்தில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக ஆதரித்த சந்திரபாபு நாயுடு, தற்போதைய சூழலில் 2.1 என்ற மாற்று நிலை மொத்த கருவுறுதல் விகிதத்தை (TFR) பராமரிப்பது அவசியம் என்றும், “குழந்தைகள் ஒரு சுமை அல்ல, அவர்கள் நாட்டின் சொத்து” என்றும் உருகிப் பேசியுள்ளது விவாதக் களத்தை அனல் பறக்க வைத்துள்ளது.
