கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் மாற்று மத வாலிபரை காதலித்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 19 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாகல்கோட்டையைச் சேர்ந்தவர் பூமிகா (19). இவர் அங்குள்ள டயர் விற்பனை கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான டோங்ரிசாப் என்ற வாலிபருடன் பூமிகாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், தீவிரமாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் பூமிகாவின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேறு மதத்தைச் சேர்ந்த வாலிபருடனான காதலைக் கைவிடும்படி பூமிகாவை வற்புறுத்தியுள்ளனர். ஆனால், காதலில் உறுதியாக இருந்த பூமிகா, தனது காதலனை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்ததோடு, அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பிடிவாதமாக இருந்துள்ளார். அந்த வாலிபருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த பூமிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் உல்லாசமாகவும் இருந்துள்ளார்.

பூமிகாவின் திருமண ஆசைக்கு பெற்றோர் பிடி கொடுக்காததால், அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த பூமிகா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர், மகள் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகல்கோட்டை போலீஸார், பூமிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.