மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பஜாரியா பகுதியில், ஒரு மனைவி தனது கணவரின் மீது தவறான சந்தேகத்தில், கோபமுடன் அவரது மூக்கை பற்களால் கடித்து பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு, தாமதமாக வீடு திரும்பிய கணவரிடம்  சந்தேகத்தின் காரணமாக மனைவி கடுமையாக வாக்குவாதம் செய்தார்.  ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மனைவி தன் கணவனின் மூக்கை கடித்துவிட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார்.

காயமடைந்தவர், ‘சத்யம் பவுடர்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் எனவும், அவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது. திருமண வாழ்வில் தொடர்ச்சியான சந்தேகத்தின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக மனைவி தொடர்ந்து சந்தேகித்து வந்த நிலையில், இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திங்கள்கிழமை ஏற்பட்ட சண்டையின் போது, மனைவி தனது கட்டுப்பாட்டை இழந்து கணவரின் மூக்கை கடித்துவிட்டார்.  பின்னர் ரத்த காயத்துடன் உடனடியாக கணவர், அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் மனைவியின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அவரின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண வாழ்க்கையில் நம்பிக்கையின் முக்கியத்துவம் மீண்டும் வலியுறுத்தப்படும் வகையில், இந்த சம்பவம் சமூகத்தில் கவலைக்கும் கலக்கத்துக்கும் காரணமாகியுள்ளது.