தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகேயுள்ள குகட்பள்ளி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி 10 வயது சிறுமி சஹஸ்ரா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்றைய  நாள் பள்ளிக்கு விடுமுறை கிடைத்திருந்த சஹஸ்ரா, வீட்டில் தனியாக இருந்த போது, அந்த சிறுவன் திருடும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்துள்ளான், அதனை கண்டு   தடுக்க முயன்ற சஹஸ்ராவை கடும் கோபத்தில் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், சஹஸ்ராவின் கழுத்தில் மட்டும் 18 கத்திக்காயங்கள் மற்றும் வயிற்றில் 7 காயங்கள் இருப்பது, குற்றம் எவ்வளவு கொடூரமானது என்பதை காட்டுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் இந்த கொலை நடந்ததாகத் தெரிய வந்துள்ளது.

சிறுமியின் அலறல் சத்தத்தை அண்டை வீடுகளில் இருந்தவர்கள் கேட்டதும், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மோப்ப நாய்ப்படை மற்றும் விசாரணை குழுவினர் விரைந்து வந்து ஆதாரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போதும் முதலில் உறுதியான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

வழக்கில் முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டதோடு, அருகிலுள்ள வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், சிறுவன் சந்தேகத்திற்கிடமான விதத்தில் நடந்துகொண்டதும், கூரையில் ஒளிந்ததும் குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டில் நடந்த சோதனையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, இரத்தம் படிந்த துணிகள், மற்றும் திருடும் நோக்கில் திட்டமிட்டு எழுதிய நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. குற்றத்தைச் செய்ய சிறுவன் எப்படி திட்டமிட்டான் என்பதையும், கத்தியை எங்கிருந்து பெற்றான் என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூகத்தை உலுக்கும்  வகையில் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.