வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர், தனது உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், மனவேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பள்ளி கவுன்சிலிங் மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 12-ம் தேதி போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஏற்கனவே மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவிக்கு முறையான பாதுகாப்பு மற்றும் மேலதிக மனநல ஆலோசனைகள் வழங்கப்படாதது இந்தத் துயரத்திற்கு இட்டுச் சென்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் பெற்றோர்கள் பிரிந்து வாழ்ந்த நிலையில் தந்தையுடன் வசித்து வந்த அந்த மாணவி, கடந்த காலங்களில் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், குற்றவாளிகள் பிடிபட்ட பிறகும் மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் காட்டுவதாக உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கேரளாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பிந்தைய பராமரிப்பு மற்றும் ஆலோசனைகளின் அவசியம் குறித்தும் மீண்டும் ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளது.
