ராஜமவுலி டைரக்டில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் தான் ராம்சரண். தற்போது இவர் பெத்தி எனும் படத்தில் நடித்து வரும் நிலையில், இது அடுத்த வருடம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் உலகத்தில் முதன்முறையாக வில்வித்தைகான லீக் போட்டியானது இந்தியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளை ஏபிஎல் எனும் பெயரில் இந்தியாவின் வில்வித்தைகான அமைப்பு நடத்தி வருகிறது. இந்தப் போட்டிகள் வருகிற அக்,2-12 வரை நடைபெற இருக்கிறது.
இதில் விளம்பர தூதராக ராம்சரண் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ராம்சரண் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை ஏபிஎல் தொடரின் விளம்பர தூதராக நியமித்ததற்கு சந்தோஷப்படுகிறேன். வில்வித்தை என்பது துல்லியம், கவனம் மற்றும் வலிமையை பிரதிபலிக்கும் ஒன்று. உலகம் முழுவதும் இருக்கின்ற வீரர் வீராங்கனைகளுக்கு இத்தொடர் உத்வேகம் கொடுக்கும் என நம்புகிறேன். ஆகவே வில்லை எய்து சிறப்பு அடையுங்கள்” என்று அவர் தெரிவித்தார்.
