தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக பொது மற்றும் தனித் தொகுதிகளுக்கு என தனித்தனியாகக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், விருப்ப மனு விநியோகம் தொடங்கி நான்கு நாட்களுக்கு மேலாகியும், கட்சித் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் போதிய ஆர்வம் காணப்படவில்லை. இதனால் கட்சி அலுவலகம் பெரிய அளவில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுவது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மந்தநிலைக்குக் கூட்டணியில் நிலவும் தெளிவற்ற சூழலே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கட்சியின் மாநாடுகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்யவில்லை.
மேலும் “யாருடன் கூட்டணி என்றே தெரியாத நிலையில், வெற்றி வாய்ப்பு குறித்து கணிக்க முடியாமல் விருப்ப மனுக்களை எப்படிப் பெறுவது?” என நிர்வாகிகள் மத்தியில் ஒருவித தயக்கம் நிலவுகிறது. இந்த அரசியல் குழப்பம் காரணமாகவே, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் முன்வராத சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
