தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் உழைப்பு மொத்தமும் மழையில் வீணாகியுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் தற்போது பெய்த திடீர் கனமழையினால் முற்றிலுமாக நனைந்து சேதமடைந்துள்ளன.
மூட்டைகளை மூடி வைக்கப்பட்டிருந்த தார்பாய்கள் ஆங்காங்கே கிழிந்து போய் இருந்ததாலும், சரியான முறையில் பராமரிக்காததாலும், வெயிலிலும் மழையிலும் சிக்கி இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முளைத்து வீணாகிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மணிகள் இப்படி அதிகாரிகளின் அலட்சியத்தால் கண் முன்னே பாழாவதைக் கண்டு, அப்பகுதி நெல் விவசாயிகள் மிகுந்த வேதனையுடனும் ரத்தக் கண்ணீருடனும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த அலட்சியப் போக்குக்குக் காரணமான அதிகாரிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
